13 ஐ அமுலாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது – அபயதிஸ்ஸ தேரர்

’13’ ஆவது திருத்தச்சட்டத்தை உள்ளடக்காத, பிரிவினைவாதம் அற்ற புதியதொரு அரசியலமைப்புக்கே 69 லட்சம் பேர் ஆணை வழங்கினர். அந்த ஆணையின்கீழ் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 தொடர்பில் செயற்படுவதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.”

இவ்வாறு பேராசிரியர் மெதகொட அபயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக கொழும்பில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” ரணில் விக்கிரமசிங்க என்பவர் இந்நாட்டை பிரிப்பதற்கென்றே பிறந்தவர். 69 லட்சம் பேர் வழங்கிய மக்கள் ஆணையின்கீழ்தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியை வகிக்கின்றார்.

13 அற்ற, பிரிவினைவாதம் அல்லாத புதியதொரு அரசயலமைப்புக்கே அம்மக்கள் ஆணை வழங்கினர். மாறாக 13 ஐ அமுல்படுத்துவதற்கு அல்ல. நாட்டில் ஏற்பட்ட சிற்சில சம்பவங்களால் ஜனாதிபதி பதவி விலகினார். அந்த இடத்துக்கு வந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு 13 தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு எவ்வித உரிமையும் கிடையாது.

13 ஐ முழுமையாக அமுல்படுத்துவேன் என உறுதியளித்துவிட்டு ரணில் தேர்தலில் இறங்க வேண்டும். அப்போது அதற்கு மக்கள் எப்படி தீர்ப்பை வழங்குவார்கள் என்பதை பார்ப்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

13 விடயத்தில் மகாநாயக்கர்கள் மற்றும் மகாசங்கத்தினரின் கோரிக்கை ஏற்கப்பட வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles