இந்தோ-பங்களா நட்பு குழாய் (IBFPL) என அழைக்கப்படும் 130-கிமீ நீளமுள்ள சர்வதேச எண்ணெய் குழாய், மேற்கு வங்காளத்தில் உள்ள சிலிகுரியில் உள்ள நுமாலிகர் சுத்திகரிப்பு லிமிடெட் (NRL) மார்க்கெட்டிங் நிலையத்தில் இருந்து வங்காளதேச பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (BPC) பர்பதிபூர் கிடங்கிற்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் பணிகள் பிப்ரவரி மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2017 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுடனான சந்திப்பின் போது, ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் (MMTPA) திறன் கொண்ட இந்தக் குழாய்த்திட்டத்திற்கு நிதியளிக்க ஒப்புக்கொண்டபோது, 2017 ஆம் ஆண்டில் இந்த திட்டத்தின் விதை விதைக்கப்பட்டது.
செப்டம்பர் 2018 இல் நடைபெற்ற IBFPL இன் சம்பிரதாய தொடக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம் திகதி நிறைவடைந்தது. IBFPL கட்டுமானத்திற்கான மொத்த திட்டச் செலவு இந்திய மதித்தில் ரூ.377.08 கோடி. இதில், NRL இன் முதலீடு இந்தியாவின் குழாய்ப் பகுதிக்கு ரூ. 91.84 கோடியாகவும், மீதமுள்ள ரூ. 285.24 கோடி பங்களாதேஷ் பகுதிக்கு இந்திய அரசாங்கத்தால் மானியமாக நிதியளிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவான பாரம்பரியம் மற்றும் பகிரப்பட்ட வரலாற்றைத் தவிர, வங்காளதேசத்துடன் இந்தியாவின் புவியியல் அருகாமை அதன் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக ஆக்கியுள்ளது. இரு தெற்காசிய நாடுகளுக்கிடையேயான உறவுகள் வளர்ந்து வருவதால், அசாம், திரிபுரா, மிசோரம், மேகாலயா உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்களின் வர்த்தகம் வளர்ச்சியடைகிறது.
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவைச் சந்தித்த அசாமில் இருந்து சென்ற ஒரு தூதுக்குழு, விடுத்த அறிக்கையில், பங்களாதேஷ் இந்த ஆண்டு இறுதியில் NRL இலிருந்து எரிவாயு மற்றும் எண்ணெயை இறக்குமதி செய்யத் தொடங்கும் என்று கூறியது.
IBFPL மூலம் இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு அதிவேக டீசலை (HSD) விற்பனை செய்வதற்கான நீண்ட கால ஒப்பந்தம் ஏப்ரல் 2017 இல் NRL மற்றும் BPC இடையே கையெழுத்தானது. பின்னர் அதே ஆண்டு அக்டோபரில், அரசு நடத்தும் NRL மற்றொரு 15 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. NRL இல், ஆயில் இந்தியா லிமிடெட் 69.63 சதவீத பங்குகளையும், அசாம் அரசு மற்றும் பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் முறையே 26 சதவீதம் மற்றும் 4.37 சதவீத பங்குகளையும் கொண்டுள்ளன.