பாதுகாப்பு பிரதி அமைச்சர் – எகிப்து தூதுவர் சந்திப்பு!

இலங்கை எகிப்து ஆகிய நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான எகிப்து தூதுவருக்கும் , பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் (23) நடைபெற்றது.

இதன்போதே இவ்வாறு இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர் என பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை பிரதிபலிக்கும் வகையில் முக்கிய விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டன.

இலங்கைக்கு எகிப்து அரசும் மக்களும் தொடர்ந்து வழங்கி வரும் உறுதியான ஆதரவுக்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் நன்றி தெரிவித்தார்.

இலங்கையை மீள்கட்டியெழுப்பும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், அனைத்து துறைகளிலும் இயல்புநிலையை மீட்டெடுக்க அரசாங்கம் உறுதியாக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, வீடமைப்பு மற்றும் சமூக சேவைகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் எடுத்துரைத்தார்.

நிபுணத்துவ பரிமாற்றம், திறன் மேம்பாடு, உயர் மட்ட தூதுக்குழு வருகைகள் மற்றும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால பயிற்சி வாய்ப்புகள் ஆகியவற்றின் மூலம், இருதரப்பு பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான
உறுதியான விருப்பத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர்.

இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட தேசிய நெருக்கடியை ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் முன்மாதிரியாக கையாண்ட இலங்கையின் அணுகுமுறையை எகிப்த்திய தூதுவர் பாராட்டினார்.

Related Articles

Latest Articles