14 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் மதுபானசாலைகளுக்கு பூட்டு!

தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மட்டும் பதுளை மாவட்டத்தில் மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை மூடிவிடும்படி, இலங்கை மதுவரித் திணைக்கள தலைமையக பிரதி ஆணையாளர், பதுளை மாவட்ட அரச அதிபருக்கு, அனுப்பியுள்ள சுற்று நிரூபமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியிருந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே, மேற்படி சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகை தினத்தன்று, மக்கள் நலன் கருதி, மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை மூடிவிட உத்தரவிடுமாறு, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், இலங்கை மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.

மதுவரித் திணைக்கள தலைமையக பிரதி ஆணையாளர், பதுளை மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பியுள்ள சுற்றுநிருபத்தின் பிரதியொன்றையும், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாருக்கும் அனுப்பியுள்ளார்.

அச் சுற்றுநிருபத்தில் பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்தை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை தவிர்த்து, மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலகப் பிரிவுகளின், மதுபான வகைகள் விற்பனை செய்யும் நிலையங்களை, தீபாவளிப் பண்டிகை தினத்தன்று மட்டும் அனுமதியளித்துள்ளேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எம். செல்வராஜா, பதுளை

Related Articles

Latest Articles