காகல தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு கொடுத்துவரும் அழுத்தங்களுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தருவதாக இதொகாவின் உபத் தலைவரும் பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தொழிலாளர்களிடம் நேற்று உறுதியளித்துள்ளார்.
காகல தோட்டத்தில் கடந்த மாதம் தொழிலாளர்கள் பறித்துள்ள மேலதிக கொழுந்துக்கு கிலோவில் இருந்து கணக்கு பார்க்கப்பட்டு கொடுப்பனவு முடிக்கப்பட்டுள்ளது. கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்பட்டால் மேலதிக கொடுப்பனவு வழங்க வேண்டும் என்பதே நடைமுறை.
ஆனால், 22 கிலோவுக்கு அதிகமாக கொழுந்தை பறித்திருந்தால் மாத்திரமே மேலதிக கொழுந்துக்கான கொடுப்பனவை வழங்க முடியுமென தோட்ட நிர்வாகம் கூறியுள்ளதால் தொழிலாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து போராட்டத்துக்கு செல்லும் ஒரு பதற்றமான நிலை தோன்றியிருந்தது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து உடனடியாக தோட்டத்துக்கு சென்ற செந்தில் தொண்டமான், தொழிலாளர்களிடம் ஏற்பட்டுள்ள சுமூகமற்ற நிலையை அறிந்துகொண்டதுடன் விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தருவதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்தார்.
இதேவேளை, இதுவரை காலமும் இருந்த நடைமுறையை பின்பற்றுமாறும் 18 கிலோவுக்கு அதிகமாக பறிக்கப்படும் கொழுந்துக்கு மேலதிக கொடுப்பனவை நிர்வாகம் கட்டாயம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
