பெருந்தோட்டங்களில் மேலதிகமாக கொய்யப்படும் தேயிலைத் தளிர்களுக்கு கூடுதல் கொடுப்பனவுகளை வழங்க முடியாதென தோட்ட முகாமைத்துவம் கூறியதால், தொழிலாளர்கள் இன்று ஒரு தினம் அடையாள வேலை நிறுத்தம் செய்துவிட்டு, இனிமேல் கூடுதலாக தேயிலைத் தளிர்கள் பறிப்பதில்லையென்ற போராட்டத்தை தொடரவுள்ளனர்.
வெலிமடைப் பகுதியின் அலகொல்லை பெருந்தோட்டத்திலேயே மேற்படி போராட்டம் இடம் பெற்று வருகின்றது.
தினமொன்றிற்கு தோட்ட முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட 18 கிலோ தேயிலைத் தளிர்களை மட்டுமே தொடர்ந்து கொய்வதற்கு, தொழிலாளர்கள் கட்சி, சங்க பேதங்களின்றி தீர்மானித்து, அப் போராட்டத்தை தொடர்வதற்கும் முடிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே, தொழிலாளர்கள், தோட்ட முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட தேயிலைத் தளிர் கிலோ கிராம் எடையை விட கூடுதலாக தேயிலைத் தளிர்களை கொய்த போதிலும், கூடுதலாக கொய்யும் தேயிலைத் தளிர்களுக்கு கூடுதல் கொடுப்பனவுகளை வழங்க முடியாதென்று, தோட்ட முகாமைத்துவம் உறுதியாக கூறினர். இதையடுத்து, தொழிலாளர்கள் கூடுதல் தேயிலைத் தளிர்களை கொய்வதில்லை. தினமொன்றிற்கு தீர்மானித்தபடியே, தேயிலைத் தளிர்களை கொய்யவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கேகாலை பிளான்டேசன் பொறுப்பிலேயே, வெலிமடை அலகொல்லை பெருந்தோட்டமும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
எம். செல்வராஜா, பதுளை










