’19’ நாட்டிற்கு சாபக்கேடு – ’20’ கட்டாயம் வேண்டும் என்கிறார் பீரிஸ்!

” 19ஆவது திருத்த சட்ட மூலம் நாட்டிற்கு ஓர் சாபக்கேடு.இதில் பகுதி பகுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில் பயன் இல்லை. இது இந்த நாட்டின் சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” – என்று அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாது,

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். 20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை எந்தவகையிலும் விலக்கிக்கொள்வதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை. தேவைப்படும் பட்சத்தில் குழுநிலையின் போது மாத்திரம் மாற்றங்களை மேற்கொள்வதற்கு உடன்பட்டுள்ளோம்.

திருத்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்களுக்குள் இது தொடர்பான எதிர்ப்புக்களை உயர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கலாம். அது தொடர்பான விசாரணைகளை உயர் நீதிமன்றம் மேற்கொள்ளும்.

இதன்பின்னர் உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கும் பாராளுமன்றத்திற்கும் அதன் நிலைப்பாட்டை அறிவிக்கும்.

பொதுத் தேர்தலின் போது ஆரம்பம் முதல் இறுதி வரை நாம் தொடர்ச்சியாக 20 ஆவது அரசியல் திருத்தம் குறித்து எமது நிலைப்பாட்டைபொது மக்கள் முன் வைத்தோம்.19ஆவது திருத்த சட்ட மூலம் நாட்டிற்கு ஓர் சாபக்கேடு. இதில் பகுதி பகுதியாக திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதில் பயன் இல்லை .இது இந்த நாட்டின் சட்டப்புத்தகத்தில் இருந்து நீக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.” – என்றும் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles