“ஈரான் கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்காவால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இலங்கையானது அழுத்தங்களுக்கு அடிபணியாது, சர்வதேச கடல்சார சட்டங்களின் பிரகாரமே இது விடயத்தில் செயல்படும் எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கையின் அமைவிடமென்பது புவிசார் ரீதியிலும் மிக முக்கியமானது. இதனால் பல நாடுகள் இலங்கைக்கு அண்மித்துள்ள சர்வதேச கடற்பரப்பை தமது கடல்போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றன.
இலங்கையை அண்மித்துள்ள சர்வதேச கடற்பரப்பில் தற்போதுவரை 47 கப்பல்கள் உள்ளன. அவை எமது நாட்டு எல்லையில் அல்ல. மேற்படி 47 கப்பல்களில் 19 ஈரான் நாட்டு கப்பல்களாகும்.
மேற்படி கப்பல்களுக்கு உணவு உள்ளிட்டவற்றை விநியோகிக்க வேண்டாம் என அமெரிக்க இலங்கைக்கு எச்சரித்துள்ளதாக கதைகள் பரப்படுகின்றன. அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. அறிவிப்புகூட விடுக்கப்படவில்லை அழுத்தம் பிரயோகிக்கப்படவும் இல்லை.
அழுத்தங்களுக்கு அடிபணியமாட்டோம். நாட்டின் சுயாதீனம், இறைமையை பாதுகாத்தே செயல்படுவோம். அதற்கமையவே முடிவுகள் எடுக்கப்படும். ராஜதந்திர தொடர்புகள் பேணப்படும்.
அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் எதையும் விநியோகிக்வில்லை. தனியார் தரப்பில் ஏதாவது செய்திருந்தால் , அவர்கள் நிலைமை அறிந்து செயல்பட வேண்டும்.”- என்றார் அமைச்சர்.
