ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுதினம் புதன்கிழமை முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே நீதி அமைச்சர் அலி சப்ரியால் ’20’ சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் அமைச்சர்களின் கருத்துகளை பெறுவதற்கு ஒருவாரம் அவகாசம் வழங்கப்படலாம் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் நாளையே கலந்துரையாடி 20 இற்கு அமைச்சரவை அனுமதி வழங்கக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கும், சுயாதீன ஆணைக்குழுக்கள் அமைப்பதற்கும், ஜனநாயக கட்டமைப்பை பலப்படுத்துவதற்கும் கடந்த ஆட்சியின்போது 19 ஆவது திருத்தச்சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
எனினும், அதிலுள்ள சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களை வழங்கும் வகையிலேயே 20ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படவுள்ளது என கூறப்படுகின்றது. உயர்நியமனங்களை வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்படலாம் எனவும், அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வகிக்கலாம்போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படலாம் எனவும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனினும், ஜனாதிபதியின் பதவிகாலம், போட்டியிடும் தடவைகள் ஆகியவற்றில் மாற்றாம் வராது எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர், 20ஆவது திருத்தச்சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.