20 ஐ ஆதரித்த அரவிந்தகுமாரின் நிலைமை கவலைக்கிடம் – ராதா

அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்து ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிய சிறுபான்மை உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது – என்று  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்னண் தெரிவித்தார்.

நுவரெலியா – கொத்மலை ரம்பொட ஆஞ்சிநேயர் ஆலயத்தில் மே தினத்தை முன்னிட்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி 01.05.2021 அன்று காலை நடைபெற்ற விசேட வழிப்பாடுகளின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் கொரோனா தாண்டவம் ஆடி கொண்டிருக்கும் போது அரசாங்கம் ரஸ்யாவில் இருந்து 4 ஹெலிகொப்டர்களை அதிக பணம் கொடுத்து கொள்வனவு செய்ய முயற்சிக்கின்றது. எனவே முதலில் மக்களுக்கு தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அது தொடர்பில் அக்கறை செலுத்தாமல் விமான கொள்வனவு குறித்து கவனம் செலுத்துகின்றனர். இதனை அநாவசிய செலவாக கருதாவிடினும் தற்போதைய நிலையில் அதற்கு முன்னுரிமை வழங்குவது உசிதமற்றது.

ஆகவே தேவையானதுக்கு முதலிடம் கொடுத்து செயற்பட வேண்டும். எனினும் அரசாங்கம் இவ்வாறு திட்டமிட்டு செயற்படுவதால் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொழும்பு துறைமுக நகர திட்டம் தொடர்பான விவாதத்தை ஒரே நாளில் நடத்தி அதை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

எதிர்கட்சிகளை புறக்கணித்து இவ்வாறு ஜனாநாயக விரோத செயற்பாட்டில் இறங்கியுள்ளளது இது புரியாத புதிராகும். இருபதாவது திருத்தத்தை ஆதரித்து ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்களை வழங்கிய சிறுபான்மை உறுப்பினர்களின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது’ என்றார்.

மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அரவிந்தகுமார் எம்.பியும் 20 ஐ ஆதரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

க.கிசாந்தன்

Related Articles

Latest Articles