20 ஆம் திகதிக்கு முன்னர் 9ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வு!

9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்தவாரம் வெளியிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில், புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் திகதியும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

இதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் பொதுத்தேர்தலுக்கான திகதியும் (ஏப்ரல் – 25), பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் திகதியும் ( மே 14) அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த பின்னர், கொரோனா வைரஸ் தாக்கத்தால் திகதி குறிப்பிடாமல் தேர்தலை, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஒத்திவைத்தார். அதன்பின்னர் திகதி குறிப்பிடப்பட்டிருந்தாலும் இரண்டாவது முறையும் தேர்தல் பிற்போடப்பட்டது.

இந்நிலையிலேயே ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டது.ஆனால் 9ஆவது பாராளுமன்றத்தின் முதல் அமர்வு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவித்தலை ஜனாதிபதி இன்னும் வர்த்தமானிமூலம் அறிவிக்கவில்லை.

எனினும், அடுத்தவாரம் வெளியிடுவார் என்றும், ஆகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நடைபெறும் எனவும் அறியமுடிகின்றது.

Related Articles

Latest Articles