அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தப்பட்டு, புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.
பாதுக்க பகுதியில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வொன்றின்பின்னர், 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் விமல்வீரவன்ஸ மேலும் கூறியதாவது,
” உத்தேச அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள குறைப்பாடுகளை நான் உட்பட கட்சி தலைவர்கள் பிரதம அமைச்சரிடம் சுட்டிக்காட்டினோம். இதனையடுத்து 20 தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிந்துரை அறிக்கை கிடைக்கும்வரை தற்போதைய 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில்லை எனவும், பரிந்துரைகள் கிடைக்கப்பெற்ற பின்னர் அவை தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வெளியாகும் வர்த்தமானி அறிவித்தலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பிரதமரால் நியமிக்கப்பட்ட குழு திங்கட்கிழமை கூடவுள்ளது. திருத்தப்பட்ட 20 ஐ சமர்ப்பித்தால் நாடாளுமன்றத்தில் எவ்வித சிக்கலும் இன்றி மூன்றிலிரண்டு பெரும்பானமையை பெற்றுவிடலாம்.” – என்றார் விமல்.