அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் மேலும் 3 திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்று அமைச்சர் விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சர் விமல்வீரவன்ஸ மேலும் கூறியவை வருமாறு,
“மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களை கருத்திற்கொண்டு ஜனாதிபதி இன்று அமைச்சரவையில் சில திருத்தங்களை கூறினார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்களுக்கு மேலதிகமாக கணக்காய்வு சட்டத்தை தற்போது நடைமுறையில் உள்ளவாறே முன்னெடுப்பதற்கும் அவசர சட்டங்களை தேசிய இடர் நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் மாத்திரம் மட்டுப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
நடைமுறை சட்டத்திற்கு அமைய, அரசியலமைப்பு தொடர்பில் எப்படியும் அவசர சட்டங்களை நிறைவேற்ற முடியாது. 19 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே அமைச்சரவையின் எண்ணிக்கை தொடர்பிலான விடயங்களை மாற்றமின்றி முன்னெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. ஜனாதிபதியின் அந்த முற்போக்கான 3 திருத்தங்களுக்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது.” – என்றார்.