2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டம்மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மொட்டு அரசாங்கத்தின் முதலாவது பட்ஜட் கடந்த நவம்பர் 17 ஆம் திகதி நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்சவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. நவம்பர் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை 2 ஆம் வாசிப்புமீதான விவாதம் நடைபெற்று அன்று மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அரசாங்கமும், அதன் தோழமைக்கட்சிகளும் ஆதரித்து வாக்களித்தன. ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிரணிகள் எதிர்த்து வாக்களித்தன.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் நால்வர்,பட்ஜட் தொடர்பான வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்வதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்படுவதாலேயே அவ்வாறானதொரு முடிவை முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்கள் எடுத்திருந்தனர். எனினும், 20 ஐ ஆதரித்த ரிஷாட் கட்சி உறுப்பினர்கள் பட்ஜட்டுக்கும் நேசக்கரம் நீட்டினர்.
ஆனால் வரவு – செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது ரிஷாட் கட்சி உறுப்பினர்களும் பட்ஜட்டை எதிர்க்ககூடும் என தெரியவருகின்றது.
பட்ஜட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதாரணப்பெரும்பான்மை போதுமாதனது. எனவே, எதிரணியின் ஆதரவு ஆளுங்கட்சிக்கு அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வரவு – செலவுத் திட்டத்தில் எவ்வாறான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பிரதமர் 10 ஆம் திகதி சபைக்கு அறிவிப்பார்.
