20 வருடங்கள் பழமையான நுகர்வோர் சட்டமூலத்தில் மாற்றம் செய்ய நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட சரியான தீர்மானங்களின் காரணமாக  வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்வதற்கு  செலவிடப்பட்ட 350  மில்லியன் அமெரிக்க  டொலர்களை சேமித்துக்கொள்ள முடிந்துள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

அதேபோல் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 20 வருடங்கள் பழமையன நுகர்வோர்  சட்டமூலத்தில்  மாற்றங்களை  மேற்கொள்ளவிருப்பதாகவும்  அமைச்சர்  சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் சலுகைகளை  பெற்றுக்கொண்ட பின்பும்  அந்த  சலுகைகளின்  நலன்களை   மக்களுக்கு  பெற்றுக்கொடுக்காத  நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  தெரிவித்தார்.

எதிர்வரும்  நாட்களில்  உள்நாட்டில் விற்பனை  செய்யப்படும் அனைத்து பொருட்களினது  விலை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவ்வாறு செய்யாத நிறுவனங்களுக்கும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நளின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து  தெரிவித்த   அவர்,

\“ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை   பொறுப் பேற்றுக்கொண்ட போது நாடு பெரும் நெருக்கடிகள் பலவற்றுக்கு முகம் கொடுத்திருந்தது.  அவ்வாறான சந்தர்ப்பத்திலயே நாட்டு மக்களின்  தேவைகளை  பூர்த்தி  செய்வதற்கு  அவசியமான அமைச்சு  ஒன்றை  எனக்கு வழங்கினார்.    நாட்டிற்குள்  சில உணவு  பொருட்கள்  இரண்டு நாட்களுக்கு மட்டுமே மீதமிருந்தன.   விவசாய  துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியின்  காரணமாக   வரலாற்றில்  ஒருபோதும் இல்லாத  அளவிற்கு   அரிசி  இறக்குமதி  செய்ய  வேண்டிய நிலைமை  ஏற்பட்டது.     கடந்த  அரசாங்கத்தின்   உரக்  கொள்கை  உணவுத் தட்டுப்பாட்டிற்கு முக்கிய  காரணமாக  மாறியிருந்தது.   எவ்வாறாயினும் விவசாயிகளுக்கு அவசியமான  உரத்தை  பெற்றுக்கொடுப்பதற்கு  அவசியமான வேலைத்திட்டத்தை  ஜனாதிபதி உரிய  வகையில் நடைமுறைப்படுத்தினார்.    அந்த வகையில் ஜனாதிபதியின் சரியான நடவடிக்கையின் காரணமாக எதிர்வரும் நாட்களில் அரிசி இறக்குமதிக்கான அவசியம் இல்லாமல்  போகும். அதனால் அரிசி   இறக்குமதிக்காக  செலவிடப்பட்ட  350 மில்லியன் அமெரிக்க  டொலர்கள்  நாட்டிற்கு மீதமாகும்.   அவ்வாறு மீதமாகும்   பணத்தைக்  கொண்டு   ஏனைய  பொருட்களை  இறக்குமதி  செய்வதற்கான  வாய்ப்பு கிட்டும்.

தற்போது  பொருட்கள் இறக்குமதி செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெறுகின்றன.  நிறுவனங்களுக்கு அவசியமான கடன் பத்திரங்களை விநியோகிக்கும் செயற்பாடுகளும் வலுவாக முன்னெடுக்கப்படுகின்றது.   வர்த்தகச் சந்தையில் நிலைமை சுமூகமாக மாறியிருந்தாலும்  பொருட்களின் விலைகள்  ஏன் குறையவில்லை என்பதே மக்களின்  கேள்வியாக  உள்ளது. ஒக்டோபர்  மாதமளவில் பொருளாதார  வளர்ச்சியை  தனிப்  பெறுமானத்திற்கு கொண்டு வருவதற்கான இயலுமை கிட்டும் என நம்பிக்கை  உள்ளது.  2022   ஆம் ஆண்டில்  காணப்பட்டதை விடவும்  இன்றளவில்  பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன.  உதாரணமாக கூறுவதாயின்  314 ரூபாயாக காணப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை  120 ரூபாயாக குறைவடைந்துள்ளது. அதபோல் உருளைக் கிழங்கு ,  வௌளை  சீனி,  பருப்பு,  கடலை,  வெள்ளை அரிசி உள்ளிட்ட  பல்வேறு   பொருட்களின்  விலை குறைவடைந்துள்ளது.  நேரடி இறக்குமதிக்கு அனுமதி வழங்கியமையினாலயே அவற்றின் விலைகள்  குறைவடைந்துள்ளன.  உள்நாட்டு  வியாபரிகள் பலரும் விலைக் குறைப்பின் நலன்களை மக்களுக்குக்கு  பெற்றுக்கொடுக்கவில்லை.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகையின் காரணமாக  விலைகளை குறைப்பதற்கான இயலுமை அவர்களுக்கு உள்ளது.   எதிர்வரும் நாட்களில்  பொருட்களின் விலையை  குறைக்காதவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை  மேற்கொள்ள  நுகர்வோர் அதிகார சபைக்கு அறிவுரை  வழங்கப்பட்டுள்ளது.  அதேபோல் டைல்,  குளியலறை சாதனங்கள் போன்றவைகளுக்கான குறைந்தபட்ச சில்லறை விலையை  நிர்ணயம்  செய்யவும் நடவடிக்கை  எடுக்கப்படும்.அத்தோடு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களுக்குமான குறைந்தபட்ச சில்லைறை விலையினை  நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும். டைல் இறக்குமதியை மட்டுப்படுத்துவதால் அதன் விலை  அதிகரிக்கிறது.  டொலருக்கு இணையாக ரூபாயின்  பெறுமதி  அதிகரிப்பதாலும்  போட்டித்தன்மையை  வழங்க முடியும்.

அந்த போட்டிக்கு தயாராகுமாறு நான் அறிவித்துள்ளேன். அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அவசியமான சூழல் தற்போது உருவாகியுள்ளது.  எதிர்வரும் நாட்களில் சீமெந்துக்கான விலை  நிர்ணயத்தின் போது  அதனை மேற்கொண்ட  முறைமை  தொடர்பில் எனக்கு  அறிவிக்குமாறு உரிய நிறுவனங்களுக்கு  நான் அறிவுறுத்தியுள்ளேன்.  சீமெந்து உற்பத்திக்கான  செலவு, இலாபம், வியாபாரிகளுக்குக்கான இலாபத்தை கருத்திற்கொண்டு  அதிகபட்ச சில்லறை  விலையினை  நிர்ணயிக்க எதிர்பார்த்திருக்கிறோம் என்று அமைச்சர்  தெரிவித்தார்.

நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள்  சோதனை நடவடிக்கைகளுக்கு மாறாக   மக்களை  தெளிபடுத்தும் வேலைத்திட்டங்களில் ஈடுபட  வேண்டிய  நிலைமை உருவாகியுள்ளது. விலைகள் சரியான முறையில் காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில் விலையை  சரியாக  அறிந்துக்கொள்ள முடியும்.  அந்தச்  செயற்பாடு  நூறு சதவீதம் சரியாக இடம்பெறுகின்றதா என்பதை   தேடி அறிய  நுகர்வோர் அதிகார சபைக்கு  அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை   செலவு அதிகமாவதை குறைக்கும் நோக்கில் உற்பத்திச்  செலவீனங்களை  குறைப்பதற்கான  நடவடிக்கைகள் அவசியம்.  உற்பத்தியாளர்களுக்கு  புதிய  தொழில்நுட்பத்தை  பெற்றுக்கொடுக்க  வேண்டியது   அவசியமாகும்.  தற்போது நுகர்வோர்  பாதுகாப்பு  தொடர்பிலான  அறிக்கையொன்றை  தயாரிக்கும் பணிகள் இடம்பெறுகின்றன.  அதனூடாக உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஊடாக குறைந்த விலையில்  நுகர்வோருக்கு  பொருட்களை  பெற்றுக்கொடுக்கும் இயலுமை  காணப்படுகின்றது. பருப்பு முழுமையாக இறக்குமதி   செய்யப்படுகின்றது. உள்நாட்டில் தயாரிக்க  வேண்டிய  பொருட்களையும்  தற்போது  வெளிநாட்டிலிருந்து இறக்குமதி  செய்துகொண்டிருக்கிறோம்.   இவற்றை  புரிந்துக்கொண்டுச்  செயற்பட  வேண்டும்.

இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோரை கையாளுவது மிகவும் கடினமானதாகும்.  20 வருடங்களுக்கு பின்னர் நுகர்வோர் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அனுமதி கிடைத்துள்ளது.  அந்த சட்டமூலம் தற்போது சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அதனூடாக நுகர்வோருக்கு உயரிய பாதுகாப்பினை  வழங்க முடியும்.

குறைந்த செலவில் உள்நாட்டு உற்பத்திகளை  மேற்கொள்வதற்கான நடவடிக்கைளை  நாம் முன்னெடுக்க வேண்டும். நாட்டின் பொருளாதாரத்தை  போன்றே நுகர்வோரை  பாதுகாப்பதற்கு  பெருமளவான பணிகளை  அரசாங்கம்  மேற்கொண்டுள்ளது.  1864 பாண் கட்டளைச் சட்டத்தினை  இரத்துச்  செய்ய  கோரப்பட்டுள்ளது.   சுகாதார  அமைச்சுக்கும், தேசிய  அளவியல் திணைக்களத்திற்கும்  வர்ததக  அமைச்சுக்கும்  மேற்படிச் சட்டத்தினால் எவ்வித  செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியாதுள்ளது.   சுகாதார அமைச்சு தரத்தை  கண்காணிக்கிறது.  நிறையை அளவியல் திணைக்களம் கண்காணிக்கிறது.   பாண் கட்டளைச் சட்டம் மூன்று பகுதிகளாக பிளவுபட்டுள்ளது. அந்த சட்டத்தை  இரத்துச்  செய்து  பாணிற்கான புதிய சட்டமொன்றை  அமுல்படுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்.  அரிசிக்கு அடுத்தபடியாக கோதுமை மாவினையோ மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அது தொடர்பிலும்  அதிக அவதானம்  செலுத்த  வேண்டும். எவ்வாறாயினும் பாண் உள்ளிட்ட  உற்பத்தி  பொருட்களின் விலைகளை  குறைக்கப்டுள்ளன.  எதிர்வரும் நாட்களில்  மேலும் குறைவடையும்.

பொருட்களின் விலைகளை  குறைப்பதற்கு  அதனுடன் தொடர்புடைய  ஏனைய  அமைச்சுக்களின்  ஒத்துழைப்புக்களும் அவசியமாகும். அதேபோல பொது மக்களுக்கான சலுகைகளை  வழங்க முன்வராத நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை  எடுக்கவும் பின்வாங்கப்போவதில்லை.

இந்நாட்டிலுள்ள சில நிறுவனங்கள் மக்களுக்கான சலுகைகளை  பெற்றுக் கொடுக்வில்லை.  ஆனால் அரசாங்கத்திடமிருந்து   அவர்கள்  சலுகைகளை   பெற்றுக்கொண்டுள்ளனர்.   அதனால்  அவர்கள் அதிகளவில்  இலபாத்தையும் ஈட்டியுள்ளனர்.  அவர்கள் நாட்டு மக்களின் நிலைமை  பற்றி சிந்திக்க  வேண்டும்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு  அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு மிகவும் அவசியமானாகும்.  நாட்டின் நிர்மாணச்  செயற்பாடுகள் மீள  ஆரம்பிக்கப்பட  வேண்டும்.  சாதாரண மக்களுக்கு வீடுகளை  நிர்மாணித்துக்கொள்வதற்கும், கழிப்பறைகளை  நிர்மாணித்துக்கொள்வதற்குமான அவசியம் உள்ளது.  அதனால் அநாவசியமான முறையில் விலைகளை  அதிகரிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் தெரிவித்தார்.

 

Related Articles

Latest Articles