” மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு உடன் தீர்வுகளை வழங்கி, தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவாதத்தை அரசாங்கம் வழங்கினால் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை ஆதரிப்பதற்கு தயார்.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் வைத்து இன்று (04) 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” 19 ஆவது திருத்தச்சட்டத்திலுள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து, அதனை வலுப்படுத்துவதற்காக 19 பிளஸ் திருத்தம் முன்வைக்கப்படுமானால் அதற்கு நிச்சயம் ஆதரவு வழங்குவேன். அதுவே எனது நிலைப்பாடு.
அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 20 திருத்தச்சட்டமூலத்தில் என்ன உள்ளது? எமது மக்களுக்கு நன்மை பயக்ககூடிய எவையும் அதில் இல்லை.
குறிப்பாக மலையக மக்களுக்கு காணி உரிமையும், இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவதாகவும் அதேபோல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணைக்கையை அதிகரிப்பதாகவும் அரசாங்கம் உறுதியளித்தால் இரு கரங்களை உயர்த்தி இருபதை 20 ஆதரிக்க நான் தயார்.
ஆனால் உப்புச் சப்பு இல்லாத தெளிவாக சொன்னால் தாய், தந்தை இல்லாத இருபதை ஆதரிக்க நான் தயாரில்லை. 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் வாசித்து அறிந்தவர்கள் எவரும் 20 ஐ ஆதரிக்கமாட்டார்கள். ” – என்றார்.
இதன்போது தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் மூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலும் ஊடகியலாளர்கள் வினவினர்.இதற்கு பதிலளித்த அவர்…
” இது தொடர்பில் தீர்மானிக்க முதலாளிமார் சம்மேளனத்திற்கு தொழில் அமைச்சர் இரண்டு வாரகால அவகாசத்தை வழங்கியுள்ளார். அது தொடர்பில் முடிவெடுக்க வழங்கப்பட்ட இருவாரத்தில் 4 நாட்கள் முடிவடைந்துள்ளது. இன்னும் 10 நாட்கள் உள்ளன. எனவே அவர்களின் பதிலுக்காக காத்திருக்கின்றோம். ” – என்றார்.
க.கிசாந்தன்