’20’ ஐ எதிர்க்கும் முற்போக்கு கூட்டணி! ஆளுங்கட்சி பக்கம் தாவாது!!

அரமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக, தமிழ்முற்போக்குக் கூட்டணி வாக்களிக்குமென, அக்கட்சியின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு, புதிய அரசாங்கம் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவர உள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும், இம்மாதம் 2ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்ததோடு, 20 ஆவது திருத்தம் ஒக்டோபர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படுமெனவும், ஆளுங்கட்சியினர் அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்களும் வாக்களித்துவிட்டு, அரசாங்கத்தோடு இணைவார்களென ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும் 20ஆவது திருத்தத்துக்கு எதிராகவே தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிப்பார்களென அக்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மாகாணசபைத் தேர்தல்நிறைவடையும் வரையில் அரசாங்கத்தை ஆதரிக்கும் எந்தவொரு நகர்வுகளிலும் தமிழ் முற்போக்குக் கூட்டணி ஈடுபடாதெனவும் அறிய முடிகிறது.

அரசாங்கம் கொண்டுவரும் புதிய அரசமைப்புக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்புத் தெரிவிக்கும் பட்சத்தில், புதிய அரசமைப்பை நிறைவேற்றிக்கொள்வதற்கு தமிழ் முற்போக்குக்
கூட்டணியின் உதவியைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

இது  தொடர்பானப் பேச்சுவார்த்தைகளும் திரைமறைவில் இடம்பெற்றுள்ளதாகவும் புதிய அரசமைப்புக்கு ஆதரவாக வாக்களிக்கும் பட்சத்தில் கூட்டணிக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பில் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர்களும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுமான பழனி திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன் ஆகியோரை தொடர்புகொள்ள முயற்சித்தப்போதிலும் முயற்சி பலனளிக்கவில்லை.

நன்றி – தமிழ்மிரர் நாளிதழ்

Related Articles

Latest Articles