மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என சம்பள நிர்ணய சபையில் தீர்மானம் எட்டப்பட்டு அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ள போதிலும், அந்த கொடுப்பனவை வழங்குவதற்கு சில தோட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவருகின்றன.
அதுமட்டுமல்ல தொழில் சுமைகள் அதிகரிக்கப்படாமலேயே இக்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்ற நிலையில், 20 கிலோ கொழுந்து பறித்தால்தான் 1000 ரூபா எனவும் அழுத்தம் கொடுத்துவருகின்றன. குறித்த கட்டளையை ஏற்று 20 கிலோ பறிக்காதவர்களுக்கு இம்முறை சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை.
இதனால் மஸ்கெலியா, மரே தோட்டத்தில் உள்ள 4 பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளத்தை வாங்காமல் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
மஸ்கெலியா பிளான்டேசன், மரே தோட்டத்துக்குட்பட்ட ராஜமலை, புதுக்காடு, கெடஸ் மற்றும் வலதலை ஆகிய பிரவுகளைச் சேர்ந்த தொழிலாளர்களே ஊதிய உரிமையை வென்றெடுப்பதற்காக இவ்வாறானதொரு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் தொழிலாளர்கள் தெரிவித்தவை வருமாறு,
” வழமையாக 16 முல் 18 கிலோ கொழுந்ததான் பறிப்போம். அதற்கு நாட் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு வெளியான நிலையில் 20 கிலோ பறிக்குமாறு வலியுறுத்தப்படுகின்றது. குறிப்பாக 16 கிலோ பறித்தவர்களுக்கு 700 ரூபாவும், 18 கிலோ பறித்தவர்களுக்கு 800 முதல் 900 ரூபாவே சம்பளமாக போடப்பட்டுள்ளது. 20 கிலோ எடுத்தவர்களுக்கே ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
இதனை ஏற்கமுடியாது. கொழுந்து கிலோ அதிகரிக்கும் என்ற எந்தவொரு நிபந்தனையின் அடிப்படையிலும் சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. முன்னர் செய்த வேலையின் அளவே போதும். தொழிற்சங்கங்களும் இதனைதான் அறிவித்தனர். ஆனால் நிர்வாகம் சம்பளத்தை கை வைத்து வயிற்றில் அடித்துள்ளன.
இதனால் நாம் சம்பளம் வாங்கவில்லை. நியாயம் வேண்டும்.” – என்றனர்.
கொரோனாவால் பல பகுதிகள் முடக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் முன்கூட்டியே பொருட்களை வாங்குவதற்குகூட காசு இல்லை. திட்டமிட்ட அடிப்படையில் கம்பனிகள் அடாவடி செயலில் இறங்கியுள்ளன எனவும் தொழிலாளர்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தினர்.