‘2000 ரூபாவை பங்கிடுவதில் பெரும் நெருக்கடி’ – டிக்கோயாவிலும் அமைதியின்மை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஹட்டன், டிக்கோயா கிராம சேவகர் பிரிவில் வாழும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபா வாழ்வாதாரக் கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எவ்வித பாரபட்சமும் காட்டப்படக்கூடாது – என்று டிக்கோயா பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கால் வருமானத்தினை இழந்த, குறைந்த வருமானம்பெறும் குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு டிக்கோயா அம்மன் கோயில் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது வருமானம் இழந்த பல குடும்பங்களின் பெயர்கள் கிராம சேவகர் வைத்திருந்த பெயர் பட்டியலில் இல்லாததன் காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

இதனால் கொடுப்பனவுகள் வழங்காது பிரிதொரு தினத்தில் மீண்டும் பெயர் பட்டியலை சரி செய்து வழங்க போவதாக தெரிவித்து கிராம சேவகர் அவ்விடத்திலிருந்து சென்று விட்டார்.இதனால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்பட்டது.

இது குறித்து கிராம சேவகரிடம் கேட்ட போது, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய இந்த பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. தற்போது அதிகமானோர் தொழில் இழந்தவர்களாக காணப்படுகின்றனர். இதனால் இவர்களையும் இணைத்துக்கொண்டு பெயர்பட்டியலை புதுப்பித்து மீண்டும் இந்த கொடுப்பணவு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் கிராம சேவகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொது மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

” பல குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன. இதனால் சாப்பிடகூட வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கொழும்பில் வேலை செய்தவர்களும் வீடு திரும்பியுள்ளனர். அவர்களுக்கும் தொழில் இல்லை. இந்நிலையில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ளவர்களுக்கு வழங்கப்படாதாம்.

குறித்த பெயர் பட்டியல் ஒரு சிலரின் ஆலோசனைக்கமைய தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் உண்மையாக பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் உள்ளடக்கப்படவில்லை.”  – என்றனர்.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Related Articles

Latest Articles