” இலங்கையில் அதிகூடிய தேயிலை உற்பத்தி 2013ஆம் ஆண்டு பதிவாகியது. அந்த ஆண்டில் தேயிலை உர இறக்குமதி குறைந்த மட்டத்தில் இருந்தது. எனினும், 2020 ஆம் ஆண்டில் அதிக அளவு தேயிலை உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தபோதும் ஒப்பீட்டளவில் விளைச்சல் அதிகரிக்கவில்லை. உலக சந்தையில் உரத்தின் விலை ஏறக்குறைய இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.” – என அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டியுள்ளார்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
கறுவா, மிளகு போன்ற சிறு ஏற்றுமதிப் பயிர்களின் விலைகள் 2020 ஆம் ஆண்டளவில் கணிசமான அளவு அதிகரித்தபோதும், தேயிலையின் விலையில் அதிகரிப்பு ஏற்படவில்லை. இதனால் று தேயிலை தோட்ட உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்று குறித்த கூட்டத்தில் அமைச்சரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இது முக்கியமான விடயமென்றும், இது தொடர்பில் அவதானம் செலுத்தியிருப்பதாகவும் இதற்குப் பதிலளித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்துடன், மாத்தறை மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள நில்வளா திட்டத்தின் காரணமாக 15000 ஏக்கர் வயல்நிலங்கள் தரிசு நிலங்களமாக மாறியிருப்பதாகவும், இந்தப் பகுதிகளில் தென்னைப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வது குறித்துக் கவனம் செலுத்துமாறும் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்ஹ, அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்தார். இது தொடர்பில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் பதில் வழங்கினார்.
பாரிய தோட்டங்களுக்கு சொட்டு நீர்ப்பாசன முறைக்கு மாற்றீடான முறையொன்றை அறிமுகப்படுத்துவது, குருநாகல் மாவட்டத்தில் காணப்படும் தென்னை நார் கைத்தொழில் மற்றும் எல்கடுவ பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் உள்ள செம்புவத்தை பிரதேசத்தை சுற்றுலாவிற்கு பயன்படுத்துதல் போன்ற விடயங்களும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டன.