2019 இல் சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தியில் அதிகரிப்பு!பெருந்தோட்டங்களில் வீழ்ச்சி!!

பெருந்தோட்டத்துறையைவிட சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தி 2019ஆம் ஆண்டு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக 2019ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் ஆண்டிறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ஆம் ஆண்டு முதல் தேயிலை உற்பத்தியில் அவதானிக்கப்பட்ட கீழ் நோக்கிய போக்கானது 2019 ஆம் ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்திக்கு ஏற்பட்ட பாதகமான காரணிகளின் அடிப்படையிலேயே தேயிலை உற்பத்தி கீழ் நோக்கி நகர்ந்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் இலங்கையில் 300.1 மில்லியன் தேயிலை கி.கிராம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அது அதன் முந்தை ஆண்டுடன் ஒப்பிடுகையில், 1.3 சதவீதம் குறைவாகும். கூலி பேச்சுவார்த்தையின் போது (கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை) எழுந்த தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் ஆண்டின் முதல் அரைப்பகுதியில் நிலவிய வறட்சியும் கடேசி காலாண்டில் நிலவிய பலத்த மழையுமே தேயிலை உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டில் உயர் நில தேயிலை உற்பத்தியானது 63.1 மில்லியன் கி.கிராமாக உள்ளது. இது அதன் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.0 சதவீதம் வீழ்ச்சியாகும். அதேபோன்று மத்திய நில தேயிலை உற்பத்தியானது 47.2 கி.கிராம் மில்லியனாகும். இதுவும் 0.1 சதவீதத்தால் வீழ்ச்சிக்கண்டுள்ளது. தாழ்நில தேயிலை உற்பத்தி 2019இல் 189.9 மில்லியன் கி.கிராம் வீழ்ச்சிக்கண்டுள்ளது.

என்றாலும் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பெருந்தோட்டத்துறையைவிட சிறுதோட்டங்களில் தேயிலை உற்பத்தி கணிசமாக 2019இல் அதிகரித்துள்ளது. தேயிலை செடிகள் மீள் நடுகை, நிரப்பல் நடுகை மற்றும் சிறந்த வேளாண்மை நடைமுறைகள் மூலமாக சாத்தியமாகியுள்ளது. தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் கொழும்பு ஏலத்தில் வர்த்தகம் செய்யப்பட்ட தேயிலையின் அளவும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள தேயிலையின் அளவும் 2019ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் 2018ஆம் ஆண்டு தேயிலை கி.கிராமின் பெறுமதி 5.1 டொலர்களாக இருந்துள்ள அதேவேளை, 2019இல் 4.6 டொலர்களாக இருந்துள்ளது. இது 9.1 சதவீத வீழ்ச்சியாகும். கொழும்பு ஏலச் சந்தையில் 2018 இல் தேயிலை கி.கிராம் 581.58 ஆக காணப்பட்டுள்ளதுடன், 2019இல் 547.67 சதவீதமாக காணப்பட்டள்ளது.

தேயிலை ஏற்றுமதி வருவாயை அதிகரிப்பதற்கு இத்துறையில் பெறுமதிக் கூட்டலை மேம்படுத்தல், பண்டகசாலை, பொதியிடல் வசதிகளை மேம்படுத்தல் மற்றும் நுகர்வோர் வரையிலான பெறுமதி சங்கிலியை அதிகரிக்க வேண்டுமென மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் – எஸ்.நிஷாந்தன்

Related Articles

Latest Articles