2022 இல் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்படுமென முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் , தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர அறிவித்துள்ள நிலையில், அதற்கான சாத்தியமில்லை என தற்போதைய விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உணவு தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் அனைவரும் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுமெனவும், அந்நிலைமையை இல்லாது செய்வதற்கு தற்போதே தயாராக வேண்டும் எனவும் விவசாயத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க சுட்டிககாட்டியுள்ளார்.
ஆனால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என்பதை விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையில் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். -என்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நேற்று அறிவித்துள்ளார்.
இரசாயன உர நிறுவனங்களின் பிரதிநிதிகளே இவ்வாறான அறிவிப்புகளை விடுத்துவருகின்றனர். 25 மாவட்டங்களில் உள்ள விவசாய அதிகாரிகளுடன் நான் பேச்சு நடத்தினேன். உற்பத்தி நடவடிக்கை தொடர்பில் மீளாய்வும் செய்தேன்.
உற்பத்தியில் ஓரளவு வீழ்ச்சி ஏற்படும் என்றபோதிலும் உணவு தட்டுப்பாடு ஏற்படாது. உரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேவேளை, பெருந்தொற்று ஏற்பட்டால் உணவு தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுவது வழமையென ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்கவும் நேற்று சுட்டிக்காட்டியுள்ளார்.
