2023 ஆகஸ்டில் ஜனாதிபதி தேர்தல்!

” நாட்டு மக்கள் கோரிவருவதால் 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கின்றோம்.” – என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி  அறிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் சிறிகொத்தவில் நேற்று (07) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ஐ.தே.கவின் முக்கியஸ்தரும், முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தலுக்கான கால எல்லை குறித்து அறிவிப்பு விடுத்தார்.

” உள்ளாட்சிசபைத் தேர்தல், பொதுத்தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும்.  அப்போது செலவீனத்தையும், வீண்விரயங்களையும் குறைக்க முடியும். தனித்தனியே தேர்தல்களை நடத்துவது இனியும் ஏற்புடையது அல்ல. இது தொடர்பில் ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்படும். ” – எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன், ” 2023 மார்ச் மாதத்துக்கு பிறகு ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும். எனவே, 2023 ஆகஸ்ட் மாதமளவில் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும். நாட்டு மக்கள் தேர்தலை கோருகின்றனர். மக்கள் ஆணையுடன் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி பதவி விலகியுள்ளதால்,   ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே ஏற்புடையதாக இருக்கும். ” -எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, 2023 பெப்ரவரியில் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசு தயாராகிவருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Articles

Latest Articles