சுற்றுலா துறையில் 2024 ஆம் ஆண்டில் மிகவும் வளர்ச்சியடையும் முதல் ஐந்து நாடுகளில் இலங்கை பெயரிடப்பட்டுள்ளதாக உலகின் முன்னணி பயணச் செய்தி ஆதாரமான Travel Off Path அறிக்கை தெரிவித்துள்ளது.
Search engine optimization (SEO) நிபுணர்களான SALT.agency ஆல் இந்த பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பை உருவாக்க பெரிய அளவிலான இணைய தேடல் அளவு தரவு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குறித்து விபரிக்கப்பட்டுள்ள அறிக்கையில்,
“இலங்கைத் தீவானது அதன் கவர்ச்சியான இயல்பு, சூடான காலநிலை, வண்ணமயமான கலாச்சாரம் மற்றும் அற்புதமான உணவு ஆகியவற்றால் உலகெங்கிலும் உள்ள பயணிகளை நீண்ட காலமாக கவர்ந்துள்ளது.
“சுற்றுலாப் பயணிகளுக்கான மலிவான இடங்களில் ஒன்றாகத் தொடர்ந்து தரவரிசைப் படுத்தப்படுகின்றது. இலங்கையில் சிறப்பான கடற்கரை வாழ்க்கையை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏராளமான கலாச்சாரம் மற்றும் இயற்கை அதிசயங்களுடன் உங்கள் ஓய்வு நேரத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.
அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் இலங்கை வலுவான சுற்றுலா பயணிகளின் வரவை பதிவுசெய்துள்ளது. அமெரிக்காவிலிருந்தும் அதிக சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இதன்படி, 2024ஆம் ஆண்டில் மிகவும் பிரபலமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கை மாறமுடியும்” என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, துனிசியா, மெக்சிகோ, மொராக்கோ மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளுடன் இலங்கை பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.