ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது மாநாடு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கடந்த 15 ஆம் திகதி கொழும்பில் கோலாகலமாக நடைபெற்றது. இம்மாநாட்டில் உரையாற்றிய அரசியல் பிரமுகர்கள், தற்போதைய அரசின் செயற்பாடுகளை சரமாரியாக விமர்சித்ததுடன், 2024 இல் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலரும் எனவும் நம்பிக்கை வெளியிட்டனர்.
‘43’ எனும் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்துள்ள சம்பிக்க ரணவக்கவும் மாநாட்டில் பங்கேற்று ராஜபக்சக்களை தனக்கே உரிய பாணியில் கடுமையாக விளாசித் தள்ளினார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் சங்கமிக்கும் நோக்கிலேயே ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து சம்பிக்க ரணவக்க தனது சகாக்களுடன் வெளியேறினார். எனினும், அவர் இன்னும் உறுப்புரிமை பெறவில்லை. ராஜித சேனாரத்ன, குமார வெல்கம ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் உறுப்புரிமையை பெற்றிருந்தாலும் சம்பிக்க விவகாரமே இன்னும் இழுபறியில் இருக்கின்றது.
முதலாவது மாநாட்டுக்கு முன்னர் இப்பிரச்சினைக்கு முடிவு காணப்படும் என அறிவிப்புகள் வெளியாகியிருந்தாலும், குழப்பநிலை நீடிப்பதை அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக சம்பிக்க ரணவக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதித் தலைவர் பதவியை வழங்குவதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மறுபுறத்தில் அதிகாரமற்ற பதவியை ஏற்பதற்கு சம்பிக்கவும் தயாரில்லை. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் 43 எனும் இயக்கத்தை ஆரம்பித்துள்ளார்.
மாநாட்டுக்கு முன்னர் சம்பிக்க ரணவக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது ‘43’ எனும் அரசியல் இயக்கத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் ஓர் கிளையாக கொண்டு நடத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனினும், இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இதற்கிடையில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்தே சம்பிக்க இவ்வாறானதொரு இயக்கத்தை ஆரம்பித்துள்ளார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியானது சஜித் பிரேமதாசவை பெயரிட்டுள்ளது. ஆக சஜித்துக்கு எதிராக சம்பிக்க செயற்படுவாரா என்ற வினாவும் எழுகின்றது.