அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு இலங்கை அணி நேரடித் தகுதியை இழந்துள்ளது.
அண்மையில் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2023 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி இரண்டு போட்டிகளில் வெற்றியீட்டியபோதும் மோசமான நிகர ஓட்ட விகிதத்தை பதிவு செய்துள்ளது.
தகுதிகாண் நடைமுறைக்கு அமைய இம்முறை உலகக் கிண்ணத்தின் இரு குழுக்களிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுடன் போட்டியை நடத்தும் அணி மற்றும் நேரடி தகுதி பெற்ற அணிகளுக்கு அப்பால் உச்ச தரவரிசையை பெற்ற அணியும் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறும்.
2024 மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் மொத்தம் 10 அணிகள் ஆடவுள்ளன.
இதன்படி குழு ஒன்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவும் குழு இரண்டில் இங்கிலாந்து, இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளும் நேரடி தகுதி பெற்றுள்ளன.
போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் 2024 டி20 உலகக் கிண்ணத்திற்கு பங்களாதேஷ் தகுதி பெற்றிருப்பதோடு 2023 பெப்ரவரி 27 ஆம் திகதியின்படி ஐ.சி.சி மகளிர் டி20 தரவரிசையில் அடுத்து உயர் நிலையில் இருக்கும் பாகிஸ்தானும் நேரடி தகுதியை உறுதி செய்துள்ளது.
எஞ்சிய இரு அணிகளையும் தேர்வு செய்வதற்கு 2024 ஆரம்பத்தில் உலக தகுதிகாண் போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இந்தப் போட்டிக்கான திகதி மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும்.
இதன்படி இம்முறை மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடிய அணிகளில் இலங்கையுடன் அயர்லாந்தும் அடுத்த உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறவில்லை. இலங்கை மகளிர் தரவரிசையில் தற்போது எட்டாவது இடத்தில் இருப்பதோடு அயர்லாந்து 10ஆவது இடத்தில் காணப்படுகிறது.
இம்முறை மகளிர் டி20 உலகக் கிண்ணத்தை அவுஸ்திரேலிய அணி ஆறாவது முறையாக கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி தென்னாபிரிக்காவை 19 ஓட்டங்களால் வீழ்த்தியது. இதில் இலங்கை அணி தனது முதல் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா மற்றும் பங்களாதேஷ் அணிகளை வீழ்த்தியபோதும் அடுத்த இரு குழு நிலை போட்டிகளிலும் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்தித்ததால் நியூசிலாந்துடன் 4 புள்ளிகளை பகிர்ந்துகொண்டாலும் நிகர ஓட்ட விகிதத்தில் தனது குழுவில் நான்காவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டது.
