2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்கும் வகையிலேயே பொருளாதார இலக்குகள் அடையப்பட வேண்டும். எனவே, நிச்சயம் வரி மறுசீரமைப்பு இடம்பெறும் எனவும் ஜனாதிபதி கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
‘நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு புதிய அமைச்சரவை நிறுவப்படும். 25 இற்கும் குறையாத அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள். சிலவேளை பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை ஓரிரு எண்ணிக்கையால் அதிகரிக்கப்படும். இராஜாங்க அமைச்சு பதவி இருக்காது.
பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் பாதீடு முன்வைக்கப்படும். அரச ஊழியர்களுக்கு நிச்சயம் சம்பளம் அதிகரிக்கப்படும்.
அதேவேளை, அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்தும் எண்ணம் இல்லை. அது தொடர்ந்து வழங்கப்படும். நிவாரணத் திட்டத்தின் பெயரைக்கூட மாற்றும் நோக்கம் எமக்கு கிடையாது. ” – எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
