2026 பாதீடு அரசியல் நாடகம்: சஜித் கடும் சீற்றம்!

“வரவு – செலவுத் திட்டம் என்ற பெயரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொய்களின் மூட்டையையே முன்வைத்துள்ளார். இதில் மக்களுக்கு ஏமாற்றமே நிறைந்துள்ளது.”

– இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹொரணையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் வளமான நாடு – அழகான வாழ்க்கைக்கான வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகள் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் இன்று செயல்படுத்தப்படுகின்றதா என்பதை மக்கள் கவனமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்வைத்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்துக்குப் பதிலாக “பொய்களின் மூட்டை”யை முன்வைத்துள்ளார். அந்தத் திட்டம் மக்களை ஏமாற்றும் நோக்குடன் பொய்யான வாக்குறுதிகள் மற்றும் தவறான தகவல்களைக் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டாவது வரவு – செலவுத் திட்டம், வளமான நாட்டிற்கான திட்டம் அல்ல, மாறாக கவனமாக வடிவமைக்கப்பட்ட அரசியல் நாடகம் ஆகும்.

தேர்தல் பிரசாரத்தின்போது தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளுடன் வரவு – செலவுத் திட்டத்தில் உள்ள வாக்குறுதிகளையும் கொள்கைகளையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அவ்வாறு ஒப்பிட்டுப் பார்த்தால் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே தெளிவான முரண்பாடு இருப்பதை அறியலாம்.

ஜனாதிபதி புன்னகையுடனும் அமைதியான குரலுடனும் இதை முன்வைத்தாலும், இந்த வரவு – செலவுத் திட்டம் பொய்களின் ஒரு கட்டு மட்டுமே.

மக்கள் உதவியின்றி தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், அரசாங்கத்தின் இருப்பை நீட்டிக்கும் நோக்குடன் ஏமாற்றமும் நேர்மையின்மையும் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் நிறைந்துள்ளது.

அரசாங்கம் “கோயபல்ஸ் கோட்பாட்டின்” கீழ் இயங்குகின்து. அதாவது பொய்கள் உண்மை என்று தோன்றும் வரை திரும்பத் திரும்பக் கூறி வருகின்றது. இவ்வாறு பொய்களைக் கூறி தொடர்ந்தும் ஆட்சியில் தொங்கிக் கொண்டிருக்கலாம் என்று கருதி வருகின்றதோ தெரியாது.

இந்த வரவு – செலவுத் திட்டம் நாட்டில் உள்ள 40-50% வறுமை நிலையை நிவர்த்தி செய்ய எந்தவொரு தொலைநோக்கு பார்வையையோ அல்லது திட்டத்தையோ முன்வைக்கவில்லை. 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம், 2019 ஆம் ஆண்டில் காணப்பட்ட வாழ்க்கைத் தரம் இன்னும் மீட்டெடுக்கப்படவில்லை.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் போல அடிமையாவிட்டது. அத்துடன் மின்சாரக் கட்டணத்தை 33% குறைத்தல் மற்றும் 35 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குதல் உள்ளிட்ட அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன.

புதிய சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கை குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறியது, ஆனால் உண்மையில் ஏலவே இணக்கப்பாடு காணப்பட்ட உடன்படிக்கையையே முன்கொண்டு செல்கிறது. இன்று, வாழ்க்கைச் செலவு அதிகரித்து காணப்படுகின்றன. பொருளாதார நிவாரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை.

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசாங்கத்திடம் ஒரு தெளிவான திட்டம் இல்லை. இந்த நாட்டிற்குத் தேவையான அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்டுவருவதற்கு அரசாங்கத்திடம் மூலோபாய திட்டமோ முறையோ இல்லை. அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வெறும் “அலங்கார வார்த்தைகளையும் வெற்றுப் பேச்சுகளையும்” மட்டுமே இந்த அரசாங்கம் பயன்படுத்தி வருகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி குழப்பத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற அரசியல் சூதாட்டத்தில் ஈடுபடாது. தேசத்தை உண்மையாக கட்டியெழுப்பும் வலுவான, நம்பகமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே எமது நோக்கமாகும். அபிவிருத்தி மற்றும் வாய்ப்புகள் இல்லாததால் பல திறமையான தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ஐக்கிய மக்கள் சக்தி தனிப்பட்ட அல்லது அரசியல் இலாபத்திற்காக அல்லாமல், இலங்கைக்கு உதவ சர்வதேச கூட்டாண்மைகளைத் தொடர்ந்து தேடிக் கொண்டிருக்கின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியினரான நாம் வெளிநாடுகளுக்குச் சென்றாலும், நாட்டிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்து வருகின்றோம். இன்று பணத்திற்குக் கூட மருந்துகளை வாங்க முடியாத நிலை எமது நாட்டில் காணப்படுகின்றது. தேவையான மருந்துகளைப் பெற்றுத் தருமாறு இந்தியாவிடம் நான் கோரிக்கை விடுத்தேன்.

எனவே, கடந்த காலங்களில் நடந்த அரசியல் சூதாட்டங்களுக்குள் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பிரவேசிக்காது.” – என்றார்.

Related Articles

Latest Articles