வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது பற்றி அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது என அறியமுடிகின்றது.
மாகாணசபைத் தேர்தல் முறைமையை மாற்றும் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், எல்லை நிர்ணய அறிக்கை நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, பழைய முறைமையின் கீழேயே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கும், அதற்குரிய சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது என தெரியவருகின்றது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட கூட்டத்தொடர் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. டிசம்பர் இறுதியில் பாதீட்டு கூட்டத்தொடர் முடிவடையும். அதன்பின்னர் மாகாணசபைத் தேர்தல் தொடர்பான சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலவேளை மார்ச் மாதத்துக்குள் தேர்தலை நடத்துவதற்கு ஏதேனும் சிக்கல்கள் இருப்பினர் தமிழ் சிங்கள புத்தாண்டு முடிவடைந்த பின்னர் ஜுன் மாதம் தேர்தல் நடத்தப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மாகாணசபைத் தேர்தலை இலங்கை விரைவில் நடத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரிலும் இது தொடர்பான வலியுறுத்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.