ஒலிம்பிக் நீச்சல் தடாகம் ஒன்றின் அளவான புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறுங்கோள் ஒன்று 23 ஆண்டுகளில் பூமியை தாக்கும் சிறு வாய்ப்பு இருப்பதாக நாசா குறிப்பிட்டுள்ளது.
இந்த குறுங்கோள் 2046 பெப்ரவரி 14 ஆம் திகதி பூமியை தாக்க 625 இல் 1 வாய்ப்பு இருப்பதாக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் கணித்திருப்பதோடு, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் கணிப்பின்படி 560இல் 1 வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட இந்த 2023 டி.டபிள்யு. என்ற குறுங்கோள் எங்கு விழ வாய்ப்பு உள்ளது என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இது விழுவதற்கான சாத்தியம் உள்ள வலயம் இந்திய பெருங்கடல் தொடக்கம் பசுபிக் பெருங்கடல் வரையும் அமெரிக்காவின் மேற்கு தொடக்கம் கிழக்கு கடற்கரை வரை பரந்த பகுதியாக உள்ளது.
160 அடி கொண்ட இந்தக் குறுங்கோள் ஒரு அணு குண்டின் அளவு சக்தியை உருவாக்கக் கூடியதாக உள்ளது. இது பெரு நகர் ஒன்றை அழிக்கும் அளவாகும். அதுவே வனப் பகுதி ஒன்றில் விழுந்தால் 80 மில்லியனுக்கும் அதிகமான மாரங்களை அழித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தக் குறுங்கோளை தொடர்ந்து அவதானித்து வரும் நிலையில் அதன் அச்சுறுத்தல் குறைவாக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் புதிய பொருட்கள் முதலில் கண்டுபிடிக்கப்படும் போது, நிச்சயமற்ற தன்மைகளைக் குறைப்பதற்கும், எதிர்காலத்தில் அவற்றின் சுற்றுப்பாதைகளை போதுமான அளவு கணிக்கவும், பல வார தரவுகள் தேவைப்படுகின்றன என்றும், நாசா பதிவிட்டுள்ளது.