21 இற்கும் 13 இற்கும் தொடர்பு கிடையாது!

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை விரும்பியவர்கள் சிறுபான்மை தலைவர்களேயென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற கட்சியின் வட்டார அமைப்பாளர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கச்சதீவை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக உத்தியோகபூர்வ முடிவுகள் ஏதும் வழங்கப்படவில்லை. அவ்விடயம் அரசியலுக்காக பேசப்பட்ட விடயமோ தெரியாது.இது தொடர்பாக ஏதும் கலந்துரையாடல்கள் நடைபெற்றதாக எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு கச்சதீவினை இந்தியாவிற்கு வழங்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது.

அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தமானது நாட்டினுடைய பாராளுமன்றத்திற்கும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான அதிகாரங்களை பற்றியதாகும். எந்தவகையிலும் 13வது திருத்தமும், 21வது திருத்தமும் சம்மந்தப்பட்டதல்ல.

ஒரு காலகட்டத்தில், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை தமிழ் தேசிய தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், அல்லது மலையக மக்களுடைய தேசிய தலைவர் தொண்டமான், முஸ்லிம் மக்களுடைய தலைவர் அஷ்ரப் ஆகியோரே வலியுறுத்தி வந்தனர். அதாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையானது சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் என அவர்கள் கூறினர். மீனவர்கள் பிரச்சினையை இயன்றளவு தீர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறல்கள், சட்டவிரோத செயற்பாடுகளால் வடமாகாண மீனவர்களின் வளங்கள் அழிக்கப்படுகி ன்றன. இவை பாரிய பிரச்சனைகளாக காணப்படுகின்றன. இச்செயற்பாடுகளால் கடற்றொழிலாளர்களின் தொழில் உபகரணங்களும் அழிக்கப்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைக்கு ஓரளவு தீர்வுகண்டு வருகின்றோம். அதேபோன்று எரிபொருள் பிரச்சனைக்கு தீர்வு எட்டப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles