உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பற்றிய விவாதத்தை எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (04) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, எதிர்வரும் 10 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை சபை ஒத்திவைப்பு பிரேரணையாக விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
மார்ச் 09 ஆம் திகதி முற்பகல் 10.00 மணிக்கு பாராளுமன்றம் ஆரம்பமாகும் அதேவேளை, முற்பகல் 10.00 மணிமுதல் முற்பகல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு நேரம் ஒதுக்கப்படும்.
அதனையடுத்து, கடந்த அமர்வில் ஒத்திவைக்கட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண சட்டம் தொடர்பான ஒழுங்கு விதியும் வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான 2 கட்டளைகள் பற்றியும் மு.ப. 11.00 முதல் பி.ப. 3.30 மணி வரை விவாதம் நடாத்த பாராளுமன்ற அலுவல்கள்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் தீர்மானித்ததாக செயலாளர் நாயகம் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை அமைக்குமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் முன்வைத்துள்ள பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.










