21/4 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகளை கண்டறியும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும். தேவையேற்படின் சர்வதேச கண்காணிப்பாளர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள் – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 21/4 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான 2ஆம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” அமெரிக்காவில் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, பிரதான சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணை குழுவின் அறிக்கையும் முழுமையாக வெளியிடப்பட்டது. செப்டம்பர் 11 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை புத்தகக் கடைகளில்கூட வாங்கலாம்.
ஆனால் 21/4 தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்னும் முழுமையாக சமர்ப்பிக்கப்படவில்லை. இணைப்புகள் ஒளிக்கப்படுகின்றன. சுயாதீன விசாரணை அரசியல் மயப்படுத்தப்படுகின்றது. இதனை ஏற்கமுடியாது. தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள், திட்டமிட்டவர்கள் என அனைவரையும் கண்டறியவேண்டும்.” என்றும் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.