நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டம் குறித்து அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.
மொட்டு கட்சியின் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ மேற்படி விடயத்தைக் குறிப்பிட்டார்.
“ 21 ஆம் திகதி நடைபெறவுள்ள போராட்டத்தால் ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விடயங்களையும் மறந்து அப்போராட்டம் பற்றி கதைக்கின்றது.
எதிரணிலுள்ள சில கட்சிகள் எதிரணியையே தாக்குகின்றன. அக்கட்சிகளுடன் எமக்கு தேர்தல் கூட்டணி கிடையாது. உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும்.
எமக்கு எதிராக சேறு பூசப்படுகின்றது. போலி பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. மிரட்டல்மூலம் எமது அரசியல் பயணத்தை தடுக்க முடியாது.” எனவும் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
நுகேகொடையில் நடைபெறவுள்ள போராட்டத்தில் தமது கட்சி பங்கேற்காது என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










