இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர்.

ஹப்புதளை, லிந்துலை, மெரேயா, அக்கரபத்தனை, டயகம மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீநாகவானி ராஜாவின் மேற்பார்வையில் ஆகஸ்ட் 30 ஆம் திகதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 31 ஆம் திகதி காலை 8 மணிவரை குறித்த இளைஞர்கள் தொடர்ச்சியாக நடனமாடியுள்ளனர். ஹட்டன், டன்பார்க் மைதானத்தில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது.
நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர், யுவதிகள் கட்டங்கட்டமாக ஓய்வெடுக்கவும், உணவு உண்ணவும் சிறிது நேரம் அனுமதி வழங்குவதற்கு சோழன் மேற்பார்வைக் குழுவின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். குறித்த இளைஞர், யுவதிகளின் சாதனை ஆட்டத்தை கண்டுகளிப்ப பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.
கண்டி மாவட்டத் தலைவர் தியாகராஜா சந்திரகுமார், கண்டி மாவட்டப் பொதுச் செயலாளர் சடையாம்பிள்ளை சந்திரமோகன் மற்றும் நுவரெலியா மாவட்டத் தலைவர் சாம்பசிவம் சதீஸ்குமார் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இந்த சாதனை நிகழ்விற்கு மலையக கலைஞர்களுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணி முழுமையான அனுசரனையையும் ஆதரவினையும் வழங்கியிருந்தது .
பொகவந்தலாவ நிருபர் சதீ .பத்தனை, கொட்டகலை நிருபர்கள்










