காஷ்மீரில் லுகேமியா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 24 வயது யுவதியின் சிகிச்சைக்கு பொதுமக்கள் ஒன்லைன் மூலம் 24 மணி நேரத்திற்குள் 80 லட்ச இந்தியா ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் புல்வாமாவில் உள்ள லாசிபோரா பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பம், தங்கள் மகளின் சிகிச்சைக்காக சமூக ஊடகங்களில் உதவி கோரியது. இந்தப் பதிவு வைரலானது. இதன்பின்னர் ஒன்லைனில் பொதுமக்கள் நிதி திரட்டும் பிரச்சாரம் ஆரம்பமானது.
இந்த யுவதியின் சகோதரர் உசைர் அஹ்மத் கூறுகையில், ஜனவரி 2022 இல் தனது சகோதரிக்கு லுகேமியா இருப்பது கண்டறியப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவரின் சிகிச்சைக்காக பள்ளத்தாக்குக்கு வெளியே மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.
“சகோதரியின் ஒன்பது மாத சிகிச்சைக்கு சுமார் ஒரு கோடி செலவானது. எங்கள் குடும்ப உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து அதை சமாளித்தோம். மருத்துவர்களின் ஆலோசனையின்படி, அவர் மீண்டும் ஒரு தொடர் பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு அவளுக்கு சில சோதனைகள் செய்யப்பட்டன. மேலும் அவளுக்கு இன்னும் ஆறு மாதங்கள் சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது சிகிச்சைக்கு சுமார் 80 லட்சம் செலவாகும் என்று மருத்துவர்கள் அறிவித்தனர்.” என்று தெரிவித்தார்.
அவரது சிகிச்சைக்காக குடும்பம் ஏற்கனவே தங்களுடைய சேமிப்பு முழுவதையும் செலவழித்துவிட்டதாகவும், அவரது சிகிச்சையைத் தொடர முடியாத நிலையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
“நாங்கள் சில ஊடகவியலாளர்களைத் தொடர்புகொண்டு எங்கள் கணக்கு விவரங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டோம். மக்கள் 24 மணி நேரத்திற்குள் இந்த உதவிகளை வழங்கினர். இன்று 80 லட்சத்திற்கும் அதிகமான பணம் கிடைத்துள்ளது. இனி அவளுக்கு சிகிச்சையைத் தொடரலாம்.” என்று உசைர் மேலும் கூறினார்.
பொது மக்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த உசைர், தேவையான பணத்தை பெற்றுள்ளதாகவும் மேலும் நன்கொடைகள் தேவையில்லை என்றும் கூறினார்.