இந்திய கிரிக்கெட் அணி 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை தவறவிட்டபோதிலும், இந்த ஒரே ஆண்டில் மட்டும் பல்வேறு உலக சாதனைகளை படைத்து அசத்தியுள்ளது. அவற்றில் சில வருமாறு,
2023 ஆம் ஆண்டானது இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஒரு சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் இந்த ஆண்டில் மட்டும் வெறும் 35 ஒருநாள் போட்டிகளில் 23.34 சராசரி மற்றும் 5.1 என்ற எகானமியுடன் 289 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளனர். இந்த 289 விக்கெட்டுகளில் எட்டுமுறை 5 விக்கெட்டுகளும் அடங்கும்.
பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கும் இது ஒரு சிறந்த ஆண்டாகவே அமைந்தது. ஒட்டுமொத்தமாக இந்திய அணியின் முன்னணி வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்மூலம் இந்திய அணி இந்தாண்டில் மட்டும் ஒருநாள் போட்டிகளில் 9 முறை 350 ஓட்டங்களுக்கு மேலான ஓட்டங்களை பதிவுசெய்துள்ளது. இதுவே ஒரு வருடத்தில் எந்தவொரு அணியும் அதிகமுறை பதிவுசெய்த ரெக்கார்டாகும்.
இதற்கு முன்பு 2019- ஆம் ஆண்டு 7 தடவைகள் ஒருநாள் போட்டிகளில் 350 ஓட்டங்களைக் கடந்த இங்கிலாந்தின் சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் 250 சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளனர். இந்த சாதனையை இதற்குமுன்பு ஒரு காலண்டர் ஆண்டில் எந்த ஒரு சர்வதேச அணியும் அடித்தது கிடையாது. தென்னாப்பிரிக்கா அணியை விட 25 சிக்சர்களை இந்திய வீரர்கள் அதிகமாக அடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டில் அதிக ஒருநாள் விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் முதல் 3 இடங்களில் இந்திய வீரர்களே இடம்பெற்றுள்ளனர். அந்தப் பட்டியலில் இந்தியாவின் பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ் 49 விக்கெட்டுகள், முகமது சிராஜ் 44 விக்கெட்டுகள் மற்றும் முகமது ஷமி 43 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.
2023 ஆம் ஆண்டு 35 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்திய அணி 27 போட்டிகளில் வெற்றியை பெற்று அசத்தியுள்ளது. இதன்மூலம் ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது அணி என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இதற்கு முன்பு 2003-ம் ஆண்டு விளையாடிய ஆஸ்திரேலியா அணி 35 போட்டிகளில் விளையாடி 30 போட்டிகளில் வெற்றிபெற்றதே முதல் சாதனையாக இருந்துவருகிறது.
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13 ஆயிரம் ஒருநாள் ஓட்டங்களை எட்டிய முதல் சர்வதேச வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோஹ்லி 2023 இல் படைத்தார். ஏற்கனவே 321 இன்னிங்ஸ்களில் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த உலக சாதனையை, 267 இன்னிங்ஸ்களில் எட்டி முறியடித்துள்ளார் விராட் கோஹ்லி.