ஏர் இந்தியா விமான விபத்துக்கு டிசிஎம்ஏ கோளாறு காரணமாக இருக்கலாம் என்று அமெரிக்க நிபுணர் தெரிவித்துள்ளார்.
டிசிஎம்ஏ என்பது போயிங் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறுகளை கண்டறியும் மென்பொருள் ஆகும்.
கடந்த ஜூன் 12-ம் திகதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டிஷ் தலைநகர் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 2 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டனை சேர்ந்த விஸ்வாஸ் குமார் ரமேஷ் என்ற பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
இந்த விமானம் அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர் விடுதி மீது மோதியதால் 29 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்தமாக அகமதாபாத் விமான விபத்தில் 270 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வு அமைப்பின சிறப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
இதில் இந்திய விமானப் படையின் மூத்த விமானிகள், அமெரிக்க தேசிய பாதுகாப்பு வாரியத்தின் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐ.நா. சபையின் சர்வதேச விமான போக்குவரத்து கழகத்தின் வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து பெறப்பட்ட தகவல்கள், உயிர் பிழைத்த பயணியின் சாட்சி அடிப்படையில் சிறப்பு குழு முதல் கட்ட விசாரணை நடத்தி விமான போக்குவரத்து துறையிடம் சில நாட்களுக்கு முன்பு சமர்ப்பித்தது.
அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து அமெரிக்காவை சேர்ந்த வால் ஸ்டிரீட் ஜர்னல் நாளிதழ் வெளியிட்ட சிறப்பு செய்தியில் ,
‘ அவசர நிலை காலத்தில் விமானத்தின் இன்ஜின்கள் அணைக்கப்பட்டு, மீண்டும் இயக்கப்படுவது வழக்கம். இதற்காக விமானத்தின் பெட்ரோல் சுவிட்சுகளை விமானிகள் அணைத்து, மீண்டும் இயக்குவார்கள்.
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் பெட்ரோல் சுவிட்சுகள் அணைக்கப்பட்டு, இரு இன்ஜின்களும் செயல் இழந்துள்ளன. இதுவே விபத்துக்கு காரணமாக இருக்கக்கூடும்.” – என்று தெரிவித்துள்ளார்.
விமான விபத்து ஏற்பட்ட ஒரு மாதத்துக்குள் முதல் கட்ட அறிக்கையை பொது தளத்தில் வெளியிட வேண்டும். இதன்படி ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான முதல்கட்ட அறிக்கை இணையத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.