புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று வரலாற்று சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ என்றழைக்கப்படும் விழா மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளது.
அரசாங்கமொன்றின் அமைச்சரவை அமைச்சர்கள் கண்டி தலதா மாளிகையின் ‘மகுல் மடுவ’ விழா மண்டபத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் முதல்தடவை இதுவாகும். இது இலங்கை அரசியல் மற்றும் வரலாற்றுப் பதிவுகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் மேற்படி சத்தியப்பிரமாண நிகழ்வு நடைபெறுவதுடன் புதிய அமைச்சரவையில் 28 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 40 இராஜாங்க அமைச்சர்களும் இடம்பெறுகின்றனர்.
அவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். நிகழ்வில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்செய்துகொண்ட பின்னர் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக சுகாதாரத்துறையினரின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மிக எளிமையாக குறைந்தளவானோரின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவிகள், தேர்ந்தெடுக்கப்பட்டவரின் அனுபவம், சிரேஷ்டத் தன்மை, தொழில்சார் பின்னணி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.