யாழ்ப்பாணம், வல்லைப் பகுதியில் மூன்று பெண்களிடம் சுமார் 10 பவுண் தங்க நகைகள் வழிப்பறி கொள்ளை இடம்பெற்றுள்ளது.
வல்லை வெளிப் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வல்லை வெளிப் பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை வழிமறித்த வழிப்பறிக் கொள்ளையர்கள் கத்தியை அவர்களின் கழுத்தில் வைத்து , அவர்கள் அணிந்திருந்த ஒன்றரை பவுண் தங்க சங்கிலி உட்பட சுமார் 08 பவுண் நகைகளை வழிப்பறிச் சென்று அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்று ஒரு சில மணி நேரத்தில், வல்லை வெளிப் பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரைப் பின்னால் வந்து மோதி அப்பெண்ணை விபத்துக்கு உள்ளாக்கி விட்டு அப்பெண் அணிந்திருந்த சுமார் ஒன்றரைப் பவுண் தங்கச் சங்கிலி மற்றும் பெறுமதியான கையடக்கத் தொலைபேசி என்பவற்றைக் கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
வலிகாமம் பகுதியையும் வடமராட்சிப் பகுதியையும் இணைக்கும் பகுதியாக வல்லைப் பகுதி காணப்படுகின்றது. இந்தப் பகுதி நீரேந்து பகுதியாகக் காணப்படுவதுடன் ஆள் நடமாட்டம் குறைந்த குடியிருப்புக்கள் அற்ற பகுதியாகும்.
இந்தப் பகுதி இரவு வேளைகளில் இருள் சூழ்ந்து காணப்படுவதால், அப்பகுதிகளில் வழிப்பறி கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகரிப்பதால், அப்பகுதி ஊடாகப் பயணிப்பது ஆபத்து நிறைந்ததாகத் தற்போது மாறி வருகின்றது.
எனவே, சம்பந்தப்பட்ட தரப்புகள் அப்பகுதியில் மின் விளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.










