நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி சுமார் 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகளைப் பெற்று இந்த நாட்டில் வாழுகின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் ஏகத் தலைமை தானே என்பது நிரூபித்துள்ளது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணை உப தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொழும்பு ,கம்பஹா ,கண்டி, நுவரெலியா ,பதுளை, இரத்தினபுரி ,கேகாலை ஆகிய மாவட்டங்களில் தனது வேட்பாளர்களை நிறுத்தியது. இந்தத் தேர்தல் முடிவுகளின் படி தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் நேரடியாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் கொழும்பு ,கம்பஹா ,கேகாலை ,இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்று உள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியா மாவட்டத்தில் 83392 வாக்குகளையும் கொழும்பு மாவட்டத்தில் 62091 வாக்குகளையும் கண்டி மாவட்டத்தில் 57445 வாக்குகளையும் பதுளை மாவட்டத்தில் 45494 வாக்குகளையும் இரத்தினபுரி மாவட்டத்தில் 36432 வாக்குகளையும் கேகாலை மாவட்டத்தில் 22758 வாக்குகளையும் கம்பஹா மாவட்டத்தில் 22429 வாக்குகளுடன் சுமார் 330,000 வாக்குகளைத்தமிழ் முற்போக்கு கூட்டணி பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ் முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற தொழிலாளர் தேசிய சங்கம் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஜனநாயக மக்கள் முன்னணி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் மலையக மக்கள் முன்னணி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளின் தலைவர்களான மனோ கணேசன் ,திகாம்பரம் ,இராதாகிருஷ்ணன் ஆகியோருடன் உதயகுமார்,வேலு குமார், அரவிந்த குமார் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் தமிழ் முற்போக்கு கூட்டனி வேட்பாளர்களான சந்திரகுமார் ,ஜனகன் ,பரணிதரன், சசிகுமார் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணி ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஒற்றுமையான அரசியல் செயற்பாடுகள் காரணமாகவே இத்தகைய வெற்றியை நிலைநாட்டக் கூடியதாக இருந்தது.
தமிழ் முற்போக்குக் கூட்டணி புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்காத போதிலும் இந்த நாட்டில் வாழ்கின்ற இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய பலம் வாய்ந்த அரசியல் அமைப்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியே என்பது திண்ணமாகும்.” – என்றுள்ளது.