55 வயது நபரின் சிறுநீர்ப்பையிலிருந்து 3.1 கிலோ கல் அகற்றம்: திருகோணமலையில் வைத்தியர்கள் சாதனை

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளி ஒருவரின் சிறுநீர்ப்பையிலிருந்து (Bladder) 3.1 கிலோகிராம் (6.8 இறாத்தல்) எடையுள்ள மிகப்பெரிய கல் ஒன்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

இது உலகிலேயே அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பை கல் எனக் கருதப்படுகிறது.

பக்கவாதப் (Stroke) பாதிப்பு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 55 வயதுடைய நோயாளி ஒருவருக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சிறுநீர்ப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் போது, முழு வளர்ச்சி அடைந்த ஒரு குழந்தையின் எடையையும், நெருப்புக்கோழி முட்டையின் அளவையும் கொண்ட இக்கல் அகற்றப்பட்டது.

“தற்போதுள்ள உலகப் பதிவுகளின்படி, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல் இதுவாகும்” என இந்த அறுவை சிகிச்சையை முன்னின்று நடத்திய டாக்டர் பிரகலாதன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். மேலும், நோயாளி தற்போது “மிகவும் ஆரோக்கியமான நிலையில்” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நோயாளி தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கி, தனது ஏனைய மருத்துவப் பாதிப்புகளுக்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார். இக்கல் நோயாளியின் சிறுநீர்ப்பையில் சுமார் 5 முதல் 10 ஆண்டுகள் வரை வளர்ந்திருக்கக் கூடும் என்றும் டாக்டர் பிரகலாதன் மேலும் தெரிவித்தார்.

சிறுநீர்ப்பைக் கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீரில் உள்ள தாதுக்கள் படிகமாகி (Crystallise) திடமான கட்டிகளாக மாறுவதன் மூலம் இவை உருவாகின்றன. சிறுநீர்ப்பை முழுமையாகக் காலியாகாத போது, எஞ்சியிருக்கும் செறிவூட்டப்பட்ட சிறுநீர் படிகங்களாக மாறுவது இதன் பொதுவான காரணமாகும்.

மணல் துகள் அளவிலான சிறிய கற்கள் இயல்பாகவே வெளியேறிவிடும். ஆனால் 1 சென்டிமீட்டருக்கு மேல் உள்ள கற்கள் சிறுநீர் பாதையை அடைத்து மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையை ஏற்படுத்துகின்றன. 4 சென்டிமீட்டருக்குப் பெரிய கற்கள் ‘ராட்சதக் கற்கள்’ (Giant stones) எனக் கருதப்படுகின்றன.

கின்னஸ் உலக சாதனை முறியடிப்பு

கின்னஸ் உலக சாதனைகளின்படி (Guinness World Records), இதற்கு முன்னர் 2003-ஆம் ஆண்டு பிரேசிலில் நோயாளி ஒருவரிடமிருந்து அகற்றப்பட்ட 1.9 கிலோகிராம் எடையும் 17.9 சென்டிமீட்டர் நீளமும் கொண்ட கல்லே உலகின் மிகப்பெரிய சிறுநீர்ப்பைக் கல்லாகப் பதிவாகியிருந்தது.

தற்போது இலங்கையில் அகற்றப்பட்ட இக்கல் சுமார் 17 சென்டிமீட்டர் நீளமும் 3.1 கிலோகிராம் எடையும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles