ஸ்காட்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அடிச்சா சிக்சர் பவுண்டரிதான் என மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலியா அணி, பவர்பிளேவான முதல் 6 ஓவரில் 113 ரன்கள் குவித்து பிரம்மிக்க வைத்துள்ளது.
ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியானது ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் கிரேஞ்ச் கிரிக்கெட் கிளப்பில் நடைபெற்றது.
முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 9.4 ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
ஸ்காட்லாந்து நிர்ணயித்த 155 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியில், தொடக்க வீரர் ஜாக் பிரேசர் 0 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார். ஆனால் அதற்குபிறகு இரண்டாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஸ் இருவரும் பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடினர்.
மாறிமாறி இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட, முதல் 6 ஓவரில் “5, 13, 20, 19, 30, 26” என ரன்களை வாரிகுவித்து 113 ரன்களை ஆஸ்திரேலியா பதிவுசெய்தது. 17 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய டிராவிஸ் ஹெட் அதிவேகமாக அரைசதமடித்த ஆஸ்திரேலியா வீரராக மாறினார்.
”இது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அடிக்கப்பட்ட அதிகபட்ச பவர்பிளே ஸ்கோராக பதிவுசெய்யப்பட்டது. இதற்கு முன்பு தென்னாப்பிரிக்காவால் அடிக்கப்பட்ட 102 ரன்கள் என்ற உலக சாதனையை ஆஸ்திரேலியா முறியடித்தது.
25 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 320 ஸ்டிரைக்ரேட்டில் 80 ரன்களை டிராவிஸ் ஹெட்டும், 325 ஸ்டிரைக்ரேட்டில் 12 பந்துகளில் 5 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் மிட்செல் மார்ஸ் 39 ரன்களும் அடிக்க 9.4 ஓவரிலேயே இலக்கை எட்டி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது ஆஸ்திரேலியா.