நேபாளத்தில் நடைபெற்றுவரும் முத்தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறன. இதன் முதல் ரி – 20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் நமீபியா – நேபாளம் ஆகிய அணிகள் மோதின.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற நமீபியா துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்கள் குவித்தது. அதிகபட்சமாக லோப்டி ஈடன் 101 ஓட்டங்களைக் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 18.5 ஓவர்களில் 186 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றிபெற்றது.
ஆட்டநாயகனாக லோப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் அதிவேகமாக சதம் அடித்து லோப்டி ஈடன் வரலாற்று சாதனை படைத்துள்ளார். அவர் 33 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதில் 11 பவுண்டரி, 8 சிக்சர்கள் அடங்கும். இதற்கு முன்னதாக 34 பந்துகளில் சதம் அடித்து கௌசல் மல்லா அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் (35 பந்துகள்) 2-வது இடத்திலும், ரோகித் சர்மா (35 பந்துகள்) 3-வது இடத்திலும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் பின்னுக்கு தள்ளி, அதிவேகமாக சதம் அடித்தவர்களின் பட்டியலில் நம்பர் 1 இடத்தை ஈடன் பிடித்துள்ளார்.