33 ஆசிரியர்கள் இருந்த இடத்தில் தற்போது 13 பேரே சேவையில்! நல்லத்தண்ணீர் பாடசாலை ஓரங்கட்டப்படுவது ஏன்?

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பெற்றோரும், பழைய மாணவர்களும், கல்வி சமூகத்தினரும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கல்வி அதிகாரிகளும், அரசியல் தலைமைத்துவங்களும் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேற்படி பாடசாலையில் 33 ஆசிரியர்கள் சேவையாற்றிய நிலையில் தற்போது 13 பேர் மாத்திரமே சேவையாற்றுகின்றனர் எனவும், இதனால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடமாற்றம் பெற்று சென்ற ஆசிரியர்களின் இடங்களுக்கு மீள் நியமனம் இடம்பெறவில்லை எனவும், இது தொடர்பில் உரிய தரப்புகளின் கவனத்துக்கு கொண்டுவந்தபோதிலும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நல்லத்தண்ணீர் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 5 முதல் உயர்தரம்வரை 560 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மஹிந்தோதய திட்டத்தின்கீழ் நிர்மாணிக்கப்பட்ட தொழில்நுட்ப பிரிவு இருந்தும், கற்றல் நடவடிக்கைக்கு துறைசார் ஆசிரியர் இல்லை. இப்படி பல பிரச்சினைகள் பாடசாலையில் நிலவுகின்றது. இது தொடர்பில் மாகாண கல்வி அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Related Articles

Latest Articles