பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலியர்களில் மேலும் மூவரை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. பதிலுக்கு, நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது.
இஸ்ரேல், ஹாமாஸ் அமைப்புக்கு இடையே கடந்த ஜனவரி 19 ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
போர் நிறுத்தத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்ரேல் மீறிவிட்டதாக குற்றம்சாட்டிய ஹமாஸ், நேற்று சனிக்கிழமை விடுவிக்கப்பட இருந்த 3 இஸ்ரேலியக் கைதிகள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பிணைக் கைதிகளை விடுவிக்கவில்லை என்றால் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விடும். ஹமாஸ்கள் இறுதியாக தோற்கடிக்கப்படும் வரை, இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் நேற்று 3 ஆண் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவித்தனர்.
பிணைக் கைதிகளின் விடுதலைக்கு ஈடாக, இஸ்ரேல் 369 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கத் தொடங்கியது. இதில் கொடிய தாக்குதல்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 36 பேரும் அடங்குவர்.
ஜனவரி 19 அன்று போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து இது ஆறாவது பரிமாற்றமாகும்.