4 நாட்களுக்குள் 1,085 பேருக்கு டெங்கு! விசேட டெங்கு ஒழிப்பு வாரம் ஆரம்பம்

நாட்டில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை (07) முதல் 13ஆம் திகதிவரையான ஒரு வாரகாலத்தை விசேட டெங்கு ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் கணிசமாக அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர், மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தார். இச்சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்த போது,

“தற்போது தொடரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் டெங்கு நோய் பரவும் அதிக ஆபத்துள்ள 70 வலயங்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், அவ்வலயங்களில் டெங்கு நோய் தொடர்பாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை அதிகளவாக முன்னெடுக்கவும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம்.

முப்படையினர், பொலிஸார், சுகாதார அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது” எனத் தெரிவித்தார்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் புள்ளிவிபரத் தகவல்களுக்கமைய, கடந்த வருடத்தில் (2023) 88 ஆயிரத்து 398 டெங்கு நோயாளர்கள் கண்டறியப்பட்டதுடன், கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகினர். டெங்கு நோயால் கடந்த வருடத்தில் மாத்திரம் 58 பேர் உயிரிழந்ததாக அத்தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

நாட்டில் 2024 ஜனவரி 4 ஆம் திகதிவரையான நான்கு நாட்களுக்குள் ஆயிரத்து 85 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles