“தற்போதைய நாடாளுமன்றம் ஒழுக்கமற்றவர்களின் கூடாரமாக மாறியுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் வென்றதும் ஒன்றரை மாதத்துக்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் பெரஹர மற்றும் திருவிழா என்பன நிறுத்தப்படும் என பிரச்சாரம் முன்னெடுக்கின்றனர். இதுகூட இனவாத பிரச்சாரம்தான். தெற்குக்கு செல்லும்போது ரிஷாட்டை ஒளித்துவிட்டு சம்பிக்கவை அழைத்து செல்கின்றனர். மன்னார் செல்லும்போது சம்பிக்கவை மறைத்துவிட்டு ரிஷாட்டை அழைத்து செல்கின்றனர். இதுதான் அவர்களின் அரசியல்? நாம் வடக்கு, கிழக்கு, தெற்கு என எல்லா இடங்களிலும் ஒன்றைதான் குறிப்பிடுகின்றோம்.
ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் கூடியவிரைவிலேயே நாடாளுமன்றம் கலைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தில் தூசனம் கதைக்கின்றனர், கப்பம் வாங்கிவிட்டு சிறைக்கு சென்றவர்கள், கொலை செய்தவர்கள் என ஒழுக்கமற்றவர்களின் கூடாரமாக மாறியுள்ளது. இப்படியொரு நாடாளுமன்றம் தேவையில்லை. எனவே, ஒன்றரை மாதத்துக்குள் நாம் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவோம். தற்போதுள்ள உறுப்பினர்களில் 150 பேரையாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.” – என்றார்.
