இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளி அடிப்படையில் திறமைச் சித்தி பெற்றுள்ள ஆறாம் ஆண்டுக்கு உள்வாங்கப்படும் மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் செயற்பாடுகளை ஒன்லைன் மூலமாக மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 47 ஆயிரத்து 193 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலதிகமான புள்ளிகளைப் பெற்று புதிய பாடசாலைகளை பெற்றுக்கொள்வதற்கான தகைமையைப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் முதலாவது தடவையாக அதுதொடர்பான ஒன்லைன் மூலமான செயற்பாடு நடைபெறுகின்ற அதேவேளை நேற்றைய தினம் அதற்கான ஆரம்ப நிகழ்வு கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது.
இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமாக புள்ளிகளை பெற்ற மாணவர்களுக்கு புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திரம் பெற்றோர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது. அதற்கிணங்க தெரிவுசெய்யப்படும் பாடசாலைகள் உள்ளிட்ட விபரங்களை திரட்டும் நடவடிக்கைகளில் பாடசாலை அதிபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று முதல் எதிர்வரும் டிசம்பர் 24ஆம் திகதி வரை அனைத்து சிங்கள தமிழ் மொழிமூல பாடசாலைகளின் அதிபர்களும் மேற்படி தரவுகளை திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவைரஸ் தொற்று அச்சுறுத்தல் சூழ்நிலையிலும் வெற்றிகரமாக ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையைநடத்த முடிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள கல்வியமைச்சர் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 26 ஆயிரத்து 264 மாணவர்களில் 47 ஆயிரத்து 193 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான புள்ளிகளைப் பெற்று புதிய பாடசாலைகளுக்காக விண்ணப்பிப்பதற்கு தகைமை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.










