சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தார். பாட்டியுடன் புல்லு வெட்டுவதற்காகச் சென்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தார்.
முல்லைத்தீவு – புளியங்குளம் – அலகரை கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் மோகனராசா லோயிதன் என்பவரே உயிரிழந்தார்.
சிறுவனும் அவரின் பாட்டியும் புல்லு வெட்டுவதற்காக தோட்டப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு யானைக்கு சட்டவிரோதமாக வைக்கப்பட்ட மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியது. அப்போது, மின்சாரத்தால் தாக்குண்டு அவர் தூக்கி வீசப்பட்டார்.
அங்கு நின்றவர்கள் அவரை மீட்டு ஒட்டுசுட்டான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே சிறுவன் உயிரிழந்தார்.
சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










